ஒரு முஸ்லிமிடம் ஜனநாயகத்தைவிடவும் அதி சிறந்த ஷுரா அமைப்பொன்றுள்ளது.
ஜனநாயகம் என்பது உமது குடும்பம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் முன்பள்ளி குழந்தை முதல் அனுபவசாலியான தாத்தாவரை அவர்களின் அனுபவம் வயது, அறிவு ஆகியவற்றை கருத்திற் கொள்ளாது அவர்களின் கருத்தைப் பெறுவதைக் குறிக்கும். அதாவது முடிவெடுப்பதில் அவர்களின் கருத்துக்களை சரிசமமாக கருத்திற் கொள்வதைக் குறிக்கும்.
ஷூரா என்பது குறித்த விடயம் பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வயதிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவர்களிடமும் அனுபவ சாலிகளிடத்திலும் ஆலோசனை பெறுதலைக் குறிக்கும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலான வேறுபாடு மிகவும் தெளிவானதாகும். ஜனநாயகத்தில் காணப்படும் மிகப்பெரும் கோளாறுகளில் ஒன்றாக, உள்ளுணர்வு, மதம், பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணாகக் காணப்படும ஓரினச்சேர்க்கை, வட்டி மற்றும் ஏனைய அருவருப்பான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப்பெற்றமையினால் சில நாடுகள் இவைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதை குறிப்பிட முடியும். இந்த வகையில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒழுக்கச் சீர்கேட்டிற்கு அழைப்புவிடுக்கும் ஜனநாயகம் ஒழுக்கக்கேடான சமூக அமைப்பை உருவாக்க பெரிதும் பங்களித்துள்ளது.
இஸ்லாமிய ஷூராவிற்கும் மேற்கத்திய ஜனநாயகத்திற்குமிடையிலான வேறுபாடு, அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரத்துடன் தொடர்பான விடயமாகும். ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை (சட்ட இறையாண்மையை) குடிமக்களுக்கும் சமூகத்திற்கும் உரியதானதாக ஆக்கியுள்ளது. ஆனால் இஸ்லாமிய ஷூராவானது சட்டமியற்றும் அதிகாரத்தை முதலில் இறைசட்டத்திற்கே வழங்கியுள்ளது, ஆகவே இதுவே ஷரீஆ சட்டமாக இருப்பதால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அங்கு இடமில்லை. ஆக சட்டம் இயற்றுவதில் இறைசட்டத்தின் மீது அதனை அடிப்படையாக் கொண்டு கட்டமைக்கும் அதிகாரத்தை தவிர வேறு எந்த அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. அதே போல் இறைசட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படாத விடயங்களில் -இஜ்திஹாத்- செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இவையெல்லாம் மனித அதிகாரமானது ஹலால் மற்றும் ஹராம் என்ற வட்டவரைக்குள் இருந்து செயற்படுவதற்காகும். (-இஜ்திஹாத்- என்பது : அல் குர்ஆன், ஸுன்னாவில் நேரடியாகத் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினைக்கு ஓர் இஸ்லாமிய சட்டவறிஞர் ஷரீஆ மூலாதாரங்களையும், சட்டவாக்க வழிமுறைகளையும் பின்பற்றி தீர்வு காண முற்படுதல் இஜ்திஹாத் எனப்படும்).