அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் கோட்பாடானது இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களில்- தீர்ப்புகளில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியாகும். இக்கோட்பாடானது முன்னைய ஒரு சட்டத்தீர்ப்பின் செயற்பாட்டை நிறுத்துவது, அல்லது குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக வந்த புதிய சட்டத்தை அனுமதித்தல் அல்லது பொதுவாக குறிப்பிடப்பட்ட ஒரு விடயத்தை வரையறுத்தல் அல்லது குறிப்பாக வந்துள்ள ஒரு தீர்ப்பை பொதுமைப்படுத்தல் போன்ற விடயங்களை முன்வைக்கும். இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவரகள் முதல் முன்னைய சட்டங்களில் காணப்பட்ட எல்லோராலும் அறியப்பட்ட ஒரு விவகராமாகும். இதற்கு உதாரணமாக பின்வரும் விடயங்களை குறிப்பிட முடியும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நலனை கருத்திற்கு கொண்டு ஒரு சகோதரர் தனது சொந்த சகோதரியை திருமணம் முடித்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஏனைய காலங்களில் வந்த இறை சட்டதிட்டங்களில் இது தீமையாக கருதப்பட்டு மாற்றப்பட்டது. அதே போன்று சனிக்கிழமை அன்று உழைத்தல் என்பது நலன் என்ற அடிப்படையில் இப்ராஹீம் அலை அவர்களினது ஷரீஆவிலும் முன்பிருந்த நபிமார்கள் மற்றும் ஏனைய எல்லா இறைசட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமாக இருந்து வந்தது. அந்த நலவானாது மூஸாஅலை அவர்களின் சட்டத்தில் தீங்காக மாறியது. அதாவது அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போன்று அல்லாஹ் இஸ்ரவேலர்கள் காளை மாட்டின் கன்றை வணங்கியமைக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களையே மாய்த்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த சட்டம் அதன் பின்னர் நீக்கப்பட்டது. இவையல்லாத இது போன்ற உதாரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆக ஒரே மார்க்கச்சட்டத்தில் ஒரு சட்டத்தீர்ப்பு இன்னொரு சட்டத்தீர்ப்பின் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அல்லது இரு தனித்தனியான மார்க்கச்சட்டங்களுக்கு இடையில் மார்க்கத் தீர்ப்புகளில் வித்தியாசம் இடம்பெற்றுள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து விளங்கிக்கொள்கிறோம்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட வைத்தியரொருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு குறிப்பிட்ட சில மருந்துகளின் மூலம் சிகிச்சையை துவங்குவார். காலம் செல்ல குறித்த நோயாளியின் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் படிமுறை மாற்றத்தின் காரணமாக அந்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது அதனை குறைத்து விடுவார். இவ்வாறாக இருக்கும் ஒரு மருத்துவரை பெரும் ஞானியாகவல்வா குறிப்பிடுகிறோம். அவ்வாறு இருக்கையில் அல்லாஹ் மனித நலன்களையெல்லாம் அறிந்தவன் என்ற அடிப்படையில் அவனுக்கே உயர் முன்மாதிரி உண்டு. அந்த வகையில் இஸ்லாமிய சட்டங்களில் -தீர்ப்புகளில் புதிய சட்டம் பழைய சட்டம் - என்றிருப்பது அல்லாஹ்வின் உயர்ஞானத்தை பறைசாட்டும் ஒரு விடயமாகும்.