அல்குர்ஆன் என்பது அகிலத்தின் இரட்சகனிடமிருந்து அனுப்பட்ட வேதங்களில் இறுதி வேதமாகும். முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்குர்ஆனுக்கு முன் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களையும் அதாவது இப்ராஹீம் அலை அவர்களின் ஸுஹுபுகள் உட்பட ஸபூர் தவ்ராத் இன்ஜீல் அவை அல்லாத இறைவேதங்களை நம்புகின்றனர். அத்துடன் எல்லா இறைவேதங்களும் தூய ஏகத்துவத்தை அதாவது "அல்லாஹ்வை இறைவனாக நம்பி வணக்கத்தை அவனுக்கு மாத்திரமே செலுத்தல்" என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட உண்மை செய்தியை –தூதுத்துவத்தை உள்ளடக்கியதாக இருந்தது என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் அல்குர்ஆன் முந்தைய இறைவேதங்களைப் போன்று, குறிப்பிட்ட குழு அல்லது பிரிவினருக்கு மாத்திரம் ஏகபோக உரிமை கொண்டதாக இல்லை. அதே போன்று பல்வேறு வித்தியாசமான பிரதிகளும் கிடையாது. அது எந்த மாற்றத்திற்கும் உட்படவுமில்லை, மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே பிரதியாக மாத்திரமே காணப்படுகிறது. அல்குர்ஆன் வாசகம் எந்த மாற்றமோ அல்லது திரிபோ இன்றி அதன் அஸல் (அடிப்படை) மொழியான அறபு மொழியிலேயே காணப்படுகிறது. அது இன்று வரையிலும் பாதுகாக்கப் பட்டதாகவே தொடர்ந்தும் உள்ளது, எதிர்காலத்திலும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ் வாக்களித்தது போன்று இப்பூவுலகம் அழிக்கப்படும் வரையில் அது நிலைத்திருக்கும். அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களினதும் கைகளில் பரிமாறப்படும் ஒரு நூலாக இருப்பதுடன், அதிகமானோரின் உள்ளங்களில் பதியவைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மக்களின் புலக்கத்தில் பரவாலாக உள்ளன. அவைகள் யாவும் அல்குர்ஆனின் கருத்துக்களை பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு மாத்திரமே என்பதை கருத்திற் கொள்ளவும். அன்றைய அரேபியர்கள் சொற்பொழிவு, சொல்லாட்சி, கவிதை போன்றவற்றில் தலைசிறந்தவர்களாக இருந்த போதிலும், குர்ஆன் போன்ற ஒன்றைத் கொண்டுவருமாறு அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் சவால் விடுத்தான். இருப்பினும், இந்த குர்ஆன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வர முடியாது என்பதை அவர்கள் உறுதியாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் இந்த சவால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தும், எவரும் இச்சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. இதுவொன்றே இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வேதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.