'அல்லாஹ்; புனித ஆலயமான கஃபாவை முதல் வழிபாட்டு தளமாகவும், விசுவாசிகளின் ஒற்றுமையின் அடையாளமாகவும் ஆக்கினான். இது தொழுகையின் போது அனைத்து முஸ்லிம்களும் முன்னோக்கும் திசையாகும். மக்காவை மையமாகக் கொண்டு இந்தப் பூமியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இதனைச்சூழ இணைகின்றனர். இறை வழிபாட்டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் பல காட்சிகளை குர்ஆன் நமக்கு முன்வைக்கிறது. இதற்கு நபி தாவூதுடன் மலைகளும் பறவைகளும் இறைவனை துதிசெய்தது ஆதாரமாக அமைகிறது. ''நிச்சயமாக நாம் தாவூதிற்கு நம்மிடமிருந்து அருளை வழங்கினோம். மலைகளே பறவைகளே! அவருடன் சேர்ந்து துதிசெய்யுங்கள். மேலும் நாம் அவருக்கு இரும்பை எளிதாக்கிக் கொடுத்தோம்''. (ஸபஃ : 10). இஸ்லாம் அதிகமான இடங்களில் இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள படைப்பினங்கள் யாவும் அகிலத்தின் இரட்சகனை துதிசெய்து மகிமைப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகிறான் : تقدم
"(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது". (ஆல இம்ரான் : 96). تقدم கஃபா என்பது சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாயிலின் மத்தியில் அமைந்துள்ள பெட்டி வடிவிலான ஒரு சதுர கட்டிடமாகும். அதற்கு கதவு உண்டு, ஆனால் யன்னல்கள் இல்லை. அதன் உள்ளே ஒன்றும் இல்லை. மேலும் அது யாருடைய கல்லறையும் அல்ல. மாறாக, அது ஒரு தொழுகை அறை. கஃபாவிற்குள் தொழும் ஒரு முஸ்லீம் எந்தத் திசையிலும் தொழலாம். வரலாறு முழுவதும் கஃபா பலமுறை புனரமைக்கப் பட்டுள்ளது. நபி இப்ராஹீம் (ஆபிரகாம்) தனது மகன் இஸ்மாஈலுடன் சேர்ந்து அதன் அடித்தளத்தை முதலில் அமைத்தார். கஃபாவின் மூலையில், ஆதம் நபியின் காலத்திலிருந்தே இருந்ததாகக் கருதப்படும் கருப்புக் கல் உள்ளது. இருப்பினும், இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது உள்ளார்ந்த சக்தி வாய்ந்த கல் அல்ல. மாறாக, அது முஸ்லிம்களுக்கான அடையாளமாக விளங்குகிறது.
பூமியின் கோளவடிவத் தன்மையானது, தொடராக இரவு பகல் மாறி மாறி வருவதை குறிக்கறது. மேலும் முஸ்லிம்கள் கஃபாவைச் சுற்றி தவாப் செய்வதன் மூலம் ஒன்றிணைந்திருப்பதும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளில் மக்கா திசை நோக்கித் தொழுவதும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அகிலங்களின் இரட்சகனை மகிமைப்படுத்தி துதிப்பதில் எப்போதும் தொடர்பில் இருப்பதை பிரதிபலிக்கிறது. இதனை படைப்பாளனான அல்லாஹ் தனது நபி ஆபிரகாமுக்கு- இப்ராஹிமுக்கு- கஃபாவின் அஸ்திவாரங்களை உயர்த்தி அதனைத் தவாப் செய்யுமாறு கட்டளையிட்டான். அதே போன்று கஃபாவானது தொழுகையின் திசையாக இருக்க வேண்டும் என எமக்குக் கட்டளையிட்டுள்ளான்.