பதில் : உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் : (ஒருநாள் நாங்கள்; இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களுடன் உட்கார்ந்திருந்த வேளை மிக வெண்மையான ஆடை அணிந்த, மிகவும் கருப்பான தலைமுடியையுடைய ஒரு மனிதர் வந்தார். அவரிடம் பிரயாணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருகில் சென்று, தனது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு சேர்த்து தனது கைகளைத் தன் தொடைகள்மீது வைத்து அமர்ந்தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் கற்றுத்தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள், 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக் கூடிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீர்; சாட்சி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடை பிடிப்பதும், ஸகாத்தை வழங்கி வருவதும்,ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், உங்களால் முடிந்தால் இறைவன் இல்லத்திற்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் 'நீங்கள் உண்மை (சரியாகவே) சொன்னீர்கள்' என்றார். அவரே கேள்வியும் கேட்டு அதற்குரிய பதில் சரியானது என்று கூறியதினால் நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், 'ஈமான் பற்றி எனக்குத் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளாகிய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்.மேலும் நன்மை, தீமை அனைத்தும் இறை விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் நீங்கள் உண்மை (சரியாகவே) சொன்னீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து அம்மனிதர், இஹ்ஸான் என்றால் என்ன என்பது பற்றி எனக்குத் தெரிவியுங்கள் (கற்றுத்தாருங்கள்) என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்க்கா விட்டாலும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனை பார்க்கவில்லையாயினும், அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்' என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் ‘எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள்.
பின்னர் அவர், அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்’.
பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்.)
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகின்ற சில பயன்கள் :
1-இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவைகளாவன :
"உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்".
தொழுகையைக் கடைப்பிடிப்பிடித்தல் (நிலைநாட்டுதல்),
ஸகாத்தை தகுதியானோருக்கு கொடுத்தல்
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல்,
புனித ஹஜ் கடமையை இறைஆலயத்திற்குச் சென்று நிறைவேற்றுதல்.
2- ஈமானின் அடிப்படை அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவை 6 ஆகும்.
அல்லாஹ்வை நம்புவதல்.
அவனுடைய மலக்குகளாகிய வானவர்களை நம்புதல்.
அவனுடைய வேதங்களை நம்புதல்.
அவனுடைய தூதர்களை நம்புதல்.
இறுதி நாளை நம்புதல்.
நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என்று நம்புதல்.
3-இஹ்ஸானின் அடிப்படை குறிப்பிடப்படப்பட்டிருத்தல். இஹ்ஸானின் அடிப்படை ஒன்றாகும். அதாவது அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்ற உள்ளுணர்வுடன் வணங்குவதாகும். நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
4- மறுமை நாள் ஏற்படும் நேரம் குறித்து அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.
நபிமொழி -4