பதில் : ஸூறதுத் தகாஸுரும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1- அல்ஹாகு முத்தகாஸுர். 2- ஹத்தா ஸுர்துமுல் மகாபிர். 3- கல்லா ஸவ்ப தஃலமூன். 4- ஸும்ம கல்லா ஸவ்ப தஃலமூன். 5- கல்லா லவ் தஃலமூன இல்மல் யகீன். 6- லதரவுன்னல் ஜஹீம். 7- ஸும்ம லதரவுன்னஹா ஐனல் யகீன். 8- ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின்னஈம். (ஸூறதுத் தகாஸுர் 1-8).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அதிகமதிகம் பொருள் சேர்த்துக் குவிக்க வேண்டும் என்ற பேராசை உங்களின் கவனத்தை திருப்பிவிட்டது). விளக்கம்: மனிதர்களே !! செல்வத்தின் மூலமும் பிள்ளைகள் மூலமும் பெருமையடிப்பது அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடப்பதை விட்டும் உங்களை திசை திருப்பிவிட்டது.
(2) (நீங்கள் மண்ணரைகளைச் சந்திக்கும் வரை) விளக்கம் : நீங்கள் மரணித்து மண்ணரைகளுக்கு செல்லும் வரையில் இது உங்கள் கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கும்.
(3) (அவ்வாறன்று. இதன் (விளைவை) நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்! ) விளக்கம் : இவ்வாறு பெருமையடிப்பது அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பதை விட்டும் உங்களை திசைதிருப்பி விடுவதன் விளைவை நீங்கள் மறுமையில் நன்கறிந்து கொள்வீர்கள்!.
(4) (பின்பும் அவ்வாறன்று. இதன் (விளைவை) நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்!) விளக்கம் : அதாவது இதன் விளைவை உண்மையாக அறிந்து கொள்வீர்கள்.
(5) (அவ்வாறன்று! நீங்கள் இதனை (விளைவை) உறுதியாக அறிந்திருந்தால் (உங்களை அது பராக்காக்கியிருக்காது)). விளக்கம் : அதாவது நீங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு உங்களின் செயல்களுக்கான கூலியும் உங்களுக்கு கிடைக்கும் என்று உறுதியாக அறிவீர்களாயின் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் மூலம் பெருமையடிக்கும் விடயங்களில் மூழ்கியிருக்கமாட்டீர்கள்.
(6) (நிச்சயம் நீங்கள் நரகத்தைக் காண்பீர்கள்!) விளக்கம் : அதாவது நீங்கள் மறுமையில் நரகத்தை நேரடியாகப் பார்ப்பீர்கள்.
(7) (பின்பும் அதை நீங்கள் மிக உறுதியாகக் காண்பீர்கள்!) விளக்கம் : அதாவது நீங்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறுதியாக அந்நரகத்தைப் பார்ப்பீர்கள்.
(8) (பின்னர் நீங்கள், அருட்கொடைகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்!) விளக்கம் : பின்பு அந்த நாளில் அல்லாஹ் உங்களுக்கு அருளாகத்தந்த ஆரோக்கியம், செல்வம் போன்ற அனைத்தைப் பற்றியும் உங்களிடம் விசாரிப்பான்.