கேள்வி: ஸூறா ஸல்ஸலாவை ஓதி அதற்கான விளக்கத்தைத் கூறுக?

பதில் : ஸூறா ஸல்ஸலாவும் அதன் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1- இதா zஸுல்zஸிலதில் அர்ழுzஸில் zஸாலஹா. 2- வஅக்ரஜதில் அர்ழு அஸ்காலஹா. 3- வகாலல் இன்ஸானு மாலஹா. 4. யவ்மஇஃதின் துஹத்திஸு அக்பாரஹா. 5- bபிஅன்ன ரbப்பக அவ்ஹாலஹா. 6- யவ்மஇஃதிய் யஸ்dதுருன்னாஸு அஷ்தாதல் லியுரவ் அஃமாலஹும். 7- பமய்யஃமல் மிஸ்கால ஃதர்ரதின் கய்ரன்யரஹ். 8- வமய்யஃமல் மிஸ்கால ஃதர்ரதின் ஷர்ரன்யரஹ். (ஸூறதுஸ்ஸல்ஸலா : 1-8)

விளக்கவுரை (தப்ஸீர்) :

பொருள்: (1) (பூகம்பத்திற்குட்பட்டு மிகக் கடுமையாக உலுக்கி விடப்படும் போது) அதாவது, மறுமை நாள் நிகழ்வதற்காக இந்தப் பூமி மிகக்கடுமையாக அசைக்கப்படும்போது என்பது இதன் கருத்தாகும். இவ்வுலகம் அழிக்கப்படுவதற்கு முன் மிகப்பெரும் ஒரு பூகம்பம் நிகழும் என்பதை இவ்வசனம் குறித்து நிற்கிறது.

2- (பூமி தன் சுமைகளை வெளியே தள்ளி விடும் போது,) அதாவது பூமியானது தனக்குள் புதைந்து கிடக்கும் பிரேதங்கள் மற்றும் ஏனைய பொருட்களை வெளியேற்றிவிடும்.

3- (மனிதன் இதற்கென்ன நடந்து விட்டது எனக் கூறுவான்)

அதாவது அசைவின்றி இருந்த இந்தப் பூமி ஏன் அசைந்து நிலையின்றி இருக்கிறது? இதற்கு என்ன நிகழந்து விட்டது என மனிதன் தட்டுத்தடுமாறியவனாகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையிலும் கூறுவான்?

4- (அந்நாளில்; அது தன் செய்திகளை வெளியிடும்). இதன் கருத்தாவது: அந்த மாபெரும் நாளில் பூமியானது தன் மீது நிகழ்ந்த நல்ல தீய காரியங்கள் குறித்த செய்திகளை அறிவிக்கும் என்பதாகும்.

5- (ஏனெனில் உமது இரட்சகன் (அவ்வாறு கூறுமாறு) அதற்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறும்). ஏனெனில் அல்லாஹ் இவ்வாறு கூறுமாறு அதற்கு அறிவித்து அதற்கு கட்டளையுமிட்டுள்ளான் என்பதாகும்.

6- (அந்நாளில் மனிதர்கள் தம் செயல்களைப் பார்ப்பதற்காக கூட்டங் கூட்டங்களாகச் சிதறுண்டு செல்வர்.) பூமியானது பலமான அதிர்வுக்குள்ளாகும். அம்மாபெரும் நாளில் இவ்வுலகில் செய்த காரியங்களுக்கான முடிவைப் பார்ப்பதறக்காக குழுக்களாக விசாரணை மன்றை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள்.

7- (எனவே எவர்அணுவளவேனும் நன்மை செய்திருப்பினும் அதனை அவர் கண்டுகொள்வார்). அதாவது யார் ஒரு சிற்றெரும்பின் அளவு நன்மையான நல்ல காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார் என்பது இதன் கருத்தாகும்.

8- (எவர்அணுவளவேனும் தீமை செய்திருப்பினும் அதனை அவர் கண்டுகொள்வார்) அதாவது யார் ஒருவர் அணுவளவேனும் தீய காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார் என்பது இதன் கருத்தாகும்.