பதில் : ஸூறதுல் மஸதும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) தப்பத் யதா அபீ லஹபிவ் வதப். (2) மா அஃனா அன்ஹு மாலுஹு வமா கஸப். (3) ஸயஸ்லா நாரன் தாத லஹப். (4) வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். (5) பீ ஜீதிஹா ஹப்லும் மிம் மஸத். (ஸுறதுல் மஸத் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அபூ லஹபின் இரு கைகளும் நாசமடையட்டும்; அவனும்
அழியட்டும்) நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான அபூலஹபின் இரு கரங்களும் அவனின் தீய செயலின் காரணத்தினால் நாசமாகட்டும். ஏனெனில் அவன் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்தான். இறுதியில் அவனின் முயற்சி பயனற்று தோற்றுப்போனது.
(2) (அவனது செல்வமோ, அவன் சம்பாதித்தவையோ அவனுக்குப் பயனளிக்கவில்லை.) அதாவது, அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவைகள் அவனுக்கு கிடைத்த தண்டனையை விட்டும் பாதுகாக்கவுமில்லை, அவனுக்கு எந்த அருளையும் பெற்றுக்கொடுக்கவுமில்லை.
(3) (விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நரகில் நுழைந்து விடுவான்.) அதாவது, மறுமையில் அவன் தீச்சுவாலையுடய நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை வேதனையோடு அனுபவிப்பான்.
(4) (விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரகில் நுழைந்துவிடுவாள்) அதாவது, நபியவர்கள் செல்லும் பாதையில் முற்களை போட்டு நபியவர்ளுக்கு தொல்லை கொடுத்து நோவினை செய்த அபூலஹபின் மனைவி உம்மு ஜமீலும் நரகினுள் நுழைவாள்.
(5) (அவளது கழுத்தில் நன்கு முறுக்கப்பட்ட ஈச்சம் கயிறு இருக்கும்.) அதாவது, அவளின் கழுத்தில் மிக இறுக்கமாக கட்டப்பட்ட கயிறு இருக்கும், அக்கயிற்றின் மூலமே நரகத்திற்கு அவள் இழுத்துச் செல்லப்படுவாள்.