பதில் : தொழும் முறை (ஒரு முஸ்லிம் பின்வரும் ஒழுங்கில் தொழுகையை நிறைவோற்றுவான்) :
1- கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை தனது முழு உடலினாலும் நேராக நின்று முன்னோக்க வேண்டும்.
2- பின்னர் தொழவிரும்பும் தொழுகையை நாவினால் மொழியாமல் மனதில் நினைக்க வேண்டும்.
3- பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கூறும்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்த வேண்டும்.
4- வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
5- பிறகு பின்வரும் பிராத்தனைகளில் (துஆக்களில்) ஒன்றை ஆரம்பமாக ஓதவேண்டும். அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும்மக்ஸில்னீ மின் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத்' பொருள் :
யாஅல்லாஹ்! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!.
அல்லது: 'ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ கைருக'. (பொருள் : யா அல்லாஹ்! உன்னை புகழ்ந்து, நீ மிகவும் பரிசுத்தமானவன் எனத் துதிசெய்கிறேன். உனது பெயர் சுபிட்சம் வாய்ந்ததும் அருட்பேறு உடையதுமாகும். உனது புகழ் (பெருமை) மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.)
6- பின்னர் இஸ்திஆதா ஓதுவார் அதாவது : அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்) 7- பிறகு பிஸ்மிலுடன் ஃபாத்திஹா ஸூராவை ஓதவேண்டும். அது பின்வருமாறு : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)). அல்ஹ்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்). அர்ரஹ்மானிர் ரஹீம். (அவன் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாவான்). மாலிகி யவ்மித்தீன். (தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே)). இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். (நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!). ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன். ((அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.) (பாதிஹா : 1 - 7).
பிறகு (ஆமீன்) என கூறுவார். ஆமீன் என்பதன் கருத்து (யாஅல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக) என்பதாகும்.
8- பிறகு அல் குர்ஆனில் அவருக்கு முடியுமான சில வசனங்களை ஓத வேண்டும். மேலும் ஸுப்ஹ் தொழுகையில் (சற்று) அதிகமாக ஓதுவார்.
9- பிறகு அவர் ருகூஃ செய்வார். அதாவது அல்லாஹ்வை மகிமைப்படுத்தும் முகமாக அவர் முதுகை வளைத்து குனிவார். இவ்வாறு ருகூ செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி தனது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்துவார். முதுகை வளைத்து தலையை நேராக முதுகின் மட்டத்திற்கு சமமாக வைப்பார். இரண்டு கைகளையும்- விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களின் மீது வைப்பார்.
10- ருகூவில் 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' (பொருள்: மகத்தான எனது இரட்சகனை நான் தூய்மைப்படுத்துகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறுவார். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ'. (பொருள் : யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னைப் புகழ்வதுடன் நீ தூய்மையானவன் என்றும் போற்றுகிறேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!.
11- 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' (பொருள் : தன்னைப் புகழ்பவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்து அங்கீகரித்தான்) என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழும்புவார். அந் நேரம் இரு கைகளையும் புயத்திற்கு நேராக உயர்த்தி 'ரப்பனா வலகல்ஹம்து' என்று கூறுவார். ஜமாஅத்தாக தொழும் மஃமூம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' என்று கூறாது அதற்குப் பதிலாக 'ரப்பனா வலகல் ஹம்து' (பொருள்: எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்று கூறுவார். குறிப்பு : தனித்துத் தொழுபவர் ருகூவிலிருந்து எழும்பும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' கூறுவதுடன் அதனைத் தொடர்ந்து 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூற வேண்டும்.
12- ருகூவிலிருந்து எழுந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின் ஷைஇன் பஃத்' என்று கூறுவார். (பொருள் : எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு (உனக்கே புகழனைத்தும்)).
13- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலாவது ஸஜ்தா செய்வார். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜூது செய்வார். கைகளை விலாவோடு சேர்த்து வைக்கவோ முழங்கைகளை தரையில் படுமாறு வைக்கவோ கூடாது. அவரின் கைவிரல்கள் கிப்லா திசையை நோக்கியதாக வைக்க வேண்டும்.
14- 'ஸுஜூதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா' (பொருள்: மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகனை துதிசெய்கிறேன்) என்று மூன்று முறை கூறவேண்டும். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பன வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ' (பொருள் :யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னை புகழ்வதுடன் நீ தூய்மையானவன் எனவும் துதிக்கின்றேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!
15- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்துவார்
16- பின்னர் இரண்டு ஸஜ்தாவுக்குமிடையில் வலது காலை நட்டி இடது காலை மடித்து அதன் மீது அமர்வார். வலது கையை வலது பக்க தெடையின் மீது முழங்காலின் ஒரத்தில் வைத்து வலது கையின் சின்ன விரலையும் மோதிர விரலையும் மடித்து ஆள்காட்டி விரலை உயர்த்தி, பிரார்த்தனை செய்யும் போது அதை அசைப்பார், மேலும் கட்டைவிரலின் நுனியை நடுவிரல் நுனியுடன் இணைத்து வட்டம் போல் ஆக்கிக்கொள்வார், அத்துடன்; அவர் தனது இடது கையை தனது இடது தொடையின் மீது விரல்களை விரித்த நிலையில் நீட்டி முழங்கால் ஓரத்தில் வைப்பார்.
17- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்து பின்வரும் துஆவை ஓதுவார் : ரப்பிஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ, வஜ்புர்னீ, வஆபினீ' (பொருள் : யா அல்லாஹ் ! என்னை மன்னித்து எனக்கு அருள்புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை தருவாயாக! என்குறைகளை மறைத்து எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!).
18- பிறகு முதல் ஸஜ்தா செய்தது போன்று இரண்டாவது ஸஜ்தாவை அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் சொன்னது, செய்ததைப்போன்று மீண்டும் செய்வார். (இத்துனுடன் முதல் ரக்அத் முடிந்துவிடும்)
19- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எழுந்து, மீண்டும் நிலைக்கு வருவார். இரண்டாவது ரக்அத்தை முதல் ரக்அத்தைப் போன்றே தொழுவார். எனினும் இதில் ஃபாத்திஹா ஸூராவுக்கு முன்னுள்ள துஆஉல் இஸ்திப்தாஹ் பிராத்தனையை மீண்டும் ஓதமாட்டார்.
20- இரண்டாவது ரக்அத் முடிந்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்தது போன்று அமர்வார்.
21- இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின்வரும் பிரார்த்தனையை ஓதுவார் : அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'. (அதனைத் தொடர்ந்து பின்வரும் ஸலவாத்தை ஓதுவார்) 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத் - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். (இதன் பிறகு பின்வரும் துஆவை ஓதுவார்). அஊது பில்லாஹி மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்' . (பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சான்று பகர்கிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் சான்று பகர்கிறேன். யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்; மீதும் அருள்புரிவாயாக. யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும்,செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக !நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்). இதன் பிறகு இம்மை மறுமைக்குரிய நலன்களில் தான் விரும்பியதை தனது இரட்சகனிடம் வேண்டிப் பிரார்த்திப்பார்.
22- பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறுவார்;. பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே கூறுவார் (இத்துடன் இரண்டு ரக்அத் தொழுகை முடிவடைகிறது.)
23- மூன்று அல்லது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைத் தொழும்போது முதலாவது அத்தஹியாத்தில் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற வார்த்தை வரை ஒதி நிறுத்திக்கொள்வார்;
24- பிறகு அல்லாஹு அக்பர் எனக் கூறி நிலைக்கு வர வேண்டும். அப்போது இரு கைகளையும் தோள் புயத்திற்கு நேராக உயர்த்த வேண்டும்.
25- எஞ்சிய ரக்அத்துக்களை இரண்டாம் ரக்அத்தை தொழுத முறையில் தொழ வேண்டும். அதில் ஸூறதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓதிக் கொள்வார்.
26- பிறகு 'தவர்ருக்' முறையில் அமர்வார். அதாவது வலது காலை நட்டி வைத்து, இடது காலை வலது காலுக்கு கீழ் வெளிப்படுத்தி தமது இருப்பிடத்தை (பித்தட்டை) தரையில் வைத்து அமர்ந்து கொள்வதே 'தவர்ருக்' முறையாகும். பின்னர் தனது இரு கைகளையும் முதலாவது அத்தஹிய்யாத்தில் தொடையின் மீது வைத்த முறையில் வைக்க வேண்டும்.
27- இந்த இருப்பில் அத்தஹிய்யாத் முழுவதையும் (துஆக்களுடன்) ஓதுவார்.
28- பிறகு வலது புறம் (முகத்தைத் திருப்பி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூறுவார்.