பதில் : அல்லாஹ்வை நம்புதல். அது பின்வரும் விடயங்களை உள்ளடக்குகிறது :
- அல்லாஹ் மாத்திரமே உன்னை படைத்து, உனக்கான வாழ்வாதாரத்தை தருபவன் என்பதையும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பினங்களின் உரிமையாளன்; என்றும் அவைகளின் விவகாரங்களை திட்டமிடுபவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும்.
- மேலும் அவன்தான் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன். அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு யாருமில்லை என்று நம்பவேண்டும்.
அல்லாஹ் மகத்தானவன் பெரியவன், பரிபூரணமானவன் புகழனைத்தும் அவனுக்குரியவை என்றும், அவனுக்கு அழகிய திருநாமங்களும் உயர் பண்புகளும் உள்ளன என்றும், அவற்றில் அவனுக்கு நிகரான அவனுக்கு ஒப்பான எதுவும் கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
2- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
மலக்குகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவர்களை அவன் ஒளியினால் படைத்தான். மேலும் அவர்கள் அவனை வணங்கி வழிபடவும் அவனின் கட்டளைக்கு முற்றாக அடிபணிந்து நடக்கவுமே படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஜிப்ரீல் (அலை) பிரதானமானவர். அவரே வஹியெனும் இறைச்செய்தியை அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு கொண்டுவருபவர்.
3- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கி அருளிய இறைச்செய்தி அடங்கிய நூல்களே வேதங்களாகும். அந்த வகையில்,
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல் குர் ஆன்,
நபி ஈஸா (அலை) மீது அருளப்பட்ட இன்ஜீல் வேதம்,
நபி மூஸா (அலை) மீது அருளப்பட்ட தவ்ராத் வேதம்,
நபி தாவூத் (அலை) மீது அருளப்பட்ட ஸபூர் வேதம்,
இப்ராஹீம் மற்றும் மூஸா இருவருக்கும் வழங்கப்பட்ட ஏடுகள் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
4- இறைத்தூதர்களை நம்புதல் :
இறைத்தூதர்கள் என்போர் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கற்றுகொடுப்பதற்காகவும், அவர்களுக்கு நன்மை மற்றும் சுவர்க்கம் குறித்து நன்மாராயம் கூறவும், தீமை மற்றும் நரகம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் அவனின் புறத்திலிருந்து அனுப்பிய உத்தம மனிதர்களைக் குறிக்கும்,
அவர்களுள் மிகவும் சிறப்புக்குரியோர் (உலுல் அஸ்ம்) திட உறுதிபூண்டோர் என்போர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
நூஹ் அலைஹிஸ்ஸலாம்,
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,
மூஸா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்,
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
5- இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) :
அதாவது மரணத்தின் பின்னுள்ள மண்ணறை வாழ்வு, மற்றும் மறுமை நாள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபட்டு விசாரணை செய்யப்படும் நாள் போன்றவற்றை இது குறிக்கும். அந்நாளில் சுவர்க்கவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நரகவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நிரந்தரமாக தங்கிவிடுவர் என்பதை நம்புவதாகும்.
6- நன்மை, தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை ஈமான் கொள்ளுதல் :
விதி என்பது இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்தையும் முழுமையாக அல்லாஹ் நன்கறிவான் என்றும், பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிந்து வைத்துள்ளான் என்றும், அவன் இவ்வாறான ஒழுங்கு இருக்க வேண்டுமென நாடி அதனை உருவாக்கினான் என்றும் நம்புவதாகும்.
இது குறித்து அல்லாஹ் : "நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவோடு படைத்துள்ளோம்". (ஸூறதுல் கமர் 49)
கழாகத்ர் எனும் நம்பிக்கையானது நான்கு படித்தரங்களை கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு :
முதலாவது : அல்லாஹ்வின் அறிவுபற்றியதாகும். அவற்றில் இப்பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகள் அதாவது அவை நிகழ்வதற்கு முன்னும் நிகழ்ந்த பின்னரும் அது குறித்த அவனின் முன்னறிவை குறிப்பிடலாம்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : "நிச்சயமாக மறுமைநாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான், அவனே கருவறையில் உள்ளவைகளையும் நனகறிவான். எந்த ஆன்மாவும்; தான் நாளை எதைச் சம்பாதிக்கும் என அறியமாட்டாது. மேலும், எந்த ஆன்மாவும் தான் எந்தப் பூமியில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மிக நுட்பமானவன்". (ஸுறது லுக்மான்:34)
இரண்டாவது : இவற்றை அல்லாஹ் லவ்ஹுல் மஹ்பூலில் ஆரம்பத்தில் எழுதி விட்டான். அதாவது நடந்தவை நடக்கவிருப்பவை யாவும் அதில் எழுதப்பட்டுவிட்டன.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : "மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். தரையிலும், கடலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். எந்த ஓர் இலையும் அதை அவன் அறியாமல் உதிருவதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையோ, பசுமையானதோ, உலர்ந்ததோ எதுவாயினும் அவனுடைய தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை". (ஸூறதுல் அன்ஆம் :59)
மூன்றாவது : எல்லா விடயங்களும் அவனின் நாட்டபடியே நிகழும். அவனிடமிருந்தும் படைப்பினங்களிடமிருந்தும் நிகழ்பவை யாவும் அவனின் நாட்டப்படியே நிகழ்கிறது.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : "இது உங்களில் யார் நேர் வழி நடக்கவிரும்புகிறாறோ அவருக்குரியதாகும். இதை அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலேயன்றி நீங்கள் நாடமாட்டீர்கள்". (ஸுறதுத் தக்வீர் 28-29)
நான்காவது : அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ்வே படைத்தான் என்றும் அவற்றை அவன் படைக்கும் போது அவற்றின் தனித்தன்மைகளையும் குணங்களையும் அங்க அசைவுகளையும், அவற்றின் அனைத்து விடயங்ளையும் அவனே படைத்தான் என்பதையும் உறுதியாக நம்புதல் (ஈமான் கொள்ளுதல்).
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : "அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றையும் படைத்தான்". (ஸூறதுஸ்ஸாப்பாத் : 96).